Friday, November 12, 2010

குழந்தையும் தெய்வமும் வேறில்லை

பிஞ்சுப் பொன் விரல்கள்
பரிவொடு தீண்டுகையில்,
"காணாததைக் கண்டது போல்
கண்கொள்ளா காட்சிக்குள் சிறைப்படுவாய்"-
என்று அசரீரீ
ஏதும் எழக்காணோம்...

பற்கள் இல்லா பளிங்கு சிரிப்பில்
பறிகொடுத்து விட்டேன் மனத்தை...

சிரித்துக் கொஞ்சி
சிந்தனை திருடிய போதும்,

தன் தாயின் தங்கையே என்று
தாய்க்கு மட்டுமே அளித்தத் தங்க முத்தங்களை
எனக்கே எனக்காய் வரம் பொழிந்த போதும்,

என் மேல் சாய்ந்து கொண்டு
எந்தையே அழைத்தாலும்,
என் நெஞ்சொடு இணைத்துக் கொண்டு
எனை விட்டு இறங்க மறுத்த போதும்,

வேறொன்றும் வேண்டாம்
வேண்டியதெல்லாம் கிட்டியாயிற்று என
மண்டியிட்டேன் இறைவனிடம்......

இன்று...

அகவை ஒன்றாகி
அமெரிக்காவில் விடுமுறை கழித்து
தாளாத ஏக்கத்தோடு
தான் மட்டும்
திரும்பிய தாத்தவைத் தேடுகிறாள்,..

கணினி வழியே
கண்ட தாத்தாவை
"பக்கத்தில் வா" என்று அழைக்கையில்,

என்ன சொல்லிப் புரியவைப்பது
எங்கள் செல்லத்துக்கு..
எட்டா மைல்களுக்கு அப்பால்
ஏங்கிக் கொண்டிருக்கிறோம் நாங்கள் என்று...... .

No comments:

Post a Comment